"சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க யாருக்கும் அதிகாரமில்லை" உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

"சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க யாருக்கும் அதிகாரமில்லை" உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க யாருக்கும் அதிகாரமில்லை என தெரிவித்து மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கை நாளை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினர் மற்றும் மெய்டி இனத்தவர்களிடையே தொடர்ந்த மோதல் கலவரமாக வெடித்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து மாநிலம் முழுவதும் இணையம் முடக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இணைய சேவையை அனுமதித்து மணிப்பூர் உயர்நீதிமன்றம், கடந்த மே 20ம் தேதி உத்தரவிட்டது.

தொடர்ந்து இதனை எதிர்த்து மாநில அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கலவரம் தொடர்பாக மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கலவரத்தை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் வன்முறையை தீவிரப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினர்.  சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், பாதுகாப்பை நிர்வகிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், நீதிமன்றத்தின் வரம்புகளை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

மனிதாபிமான அடிப்படையில் கட்டுப்பாடு நடவடிக்கைகளை கவனமாக கையாள வேண்டும் எனவும் குறிப்பிட்டு, வழக்கை நாளை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க:அரியலூரில் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்!