முகமது நபி பற்றி சர்ச்சை கருத்து கூறிய நுபுர் சர்மா.. கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக நுபுர் புகார்!!

முகமது நபி பற்றிய சர்ச்சை கருத்தில் சிக்கிய உத்தரபிரதேசத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முகமது நபி பற்றி சர்ச்சை கருத்து கூறிய நுபுர் சர்மா.. கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக நுபுர் புகார்!!
Published on
Updated on
1 min read

உத்தரபிரதேசத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளர்  நுபுர் சர்மா, ஞானவாபி மசூதி தொடர்பான விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது,  இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்குரிய இறை தூதுவரான முகமது நபி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.  மேலும் அவருக்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு பாஜக பிரமுகர் நவீன் ஜிண்டாலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இவர்களது கருத்துக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்து, இந்தியா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரியது. இதனிடையே இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் தற்போது வரை 15 நாடுகள் அவர்களின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.

இதனிடையே  மத உணர்வை புண்படுத்தியதாக நுபுர் மீது மும்பை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. விரைவில் அவர் விசாரணைக்கு ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நுபுர் சர்மா டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் மீதான விசாரணையை தொடங்கியுள்ள போலீசார்,  டுவிட்டர் நிறுவனம் பதிலளிக்கவும்  நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com