ஒரே நாடு, ஒரே நுழைவுத்தேர்வு.. மாணவர்களின் சுமையை குறைக்க மத்திய அரசு ஆலோசனை!!

ஒரே நாடு, ஒரே நுழைவுத்தேர்வு.. மாணவர்களின் சுமையை குறைக்க மத்திய அரசு ஆலோசனை!!

ஒரே நாடு, ஒரே நுழைவுத்தேர்வு என்பதன் அடிப்படையில் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 

 மருத்துவம் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வு

இந்தியாவில் பிளஸ் 2 படித்துவிட்டு மருத்துவம் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வும், என்ஐடி, ஐஐஐடி பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஜேஇஇ மெயின்ஸ் தேர்வும் நடத்தப்படுகிறது. இதேபோல் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கியூட் நுழைவு தேர்வையும் மத்திய அரசு நடத்தி வருகிறது.

மத்திய அரசு பரிசீலனை

இந்த நிலையில் நீட், ஜே.இ.இ. மெயின்ஸ் நுழைவுத்தேர்வுகளை தற்போதுள்ள 'கியூட்' என்ற பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுடன் இணைப்பதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.   இதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தடுக்கவும், அவர்களது திறன் அறிவை ஒரே தேர்வு மூலம் மதிப்பிடவும் திட்டமிட்டுள்ளது.

மாணவர்கள் சுமையை குறைக்க மத்திய அரசு ஆலோசனை

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கூறுகையில்,   ஒருங்கிணைந்த பொது நுழைவுத்தேர்வினை அடுத்த ஆண்டு முதல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது 3 பொது நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டி இருப்பதாகவும், இந்த சுமையை குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ஒரே நாடு, ஒரே நுழைவுத்தேர்வு

அதன்படி ஒரே ஒரு பொது நுழைவுத்தேர்வு மூலம், மாணவர்களின் திறனை கண்டறிந்து மதிப்பெண் அடிப்படையில் அவர்கள் விரும்பும் படிப்புகளை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாகவும் 2020-ம் ஆண்டின் தேசிய கல்வி கொள்கையும் ஒரே நாடு, ஒரே நுழைவுத்தேர்வு என்ற அம்சத்தைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருமுறை தேர்வு

மேலும் மாணவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை தருவதற்கு ஏதுவாக ஆண்டுக்கு இருமுறை இந்த தேர்வு நடத்தப்படும் என்றும் மேல்நிலைப்பள்ளி தேர்வுகள் முடிந்ததும் முதல் அமர்வு தேர்வு நடத்தப்படும், அதனைத்தொடர்ந்து  மற்றொரு அமர்வு தேர்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.