”வெட்கக் கேடான செயல்களால் எதிர்கட்சிகள் அஞ்சாது” மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்!

”வெட்கக் கேடான செயல்களால் எதிர்கட்சிகள் அஞ்சாது” மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்!
Published on
Updated on
1 min read

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு மல்லிகார்ஜூன கார்கே, சஞ்சய் ராவத், சுப்ரியா சூல் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், 18 மணி நேர சோதனைக்குப்பின் நடுஇரவில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், இரவில் வைத்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என மல்லிகார்ஜூன கார்கே அறிக்கை வெளியிட்டுள்ளார். இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே என குற்றம்சாட்டிய அவர், இதுபோன்ற வெட்கக் கேடான நடவடிக்கைகளால் எதிர்கட்சிகள் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

செந்தில்பாலாஜியின் கைதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என என்.சி.பி தலைவர் சரத்பவாரின் மகளும், எம்பியுமான சுப்ரியா சூல் மும்பையில் பேட்டியளித்துள்ளார். அனைத்தும் எதிர்பார்த்ததுதான் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறை தொடர்ந்து முற்றிலும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுகாட்டா ராயும் விமர்சித்துள்ளார்.

பாஜக முக்கியத் தலைவர்கள் மீது ஆதாரத்துடன் புகார்கள் அனுப்பப்படும்போதும், அவர்கள் மீது ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என உத்தவ்தாக்கரே சிவசேனா ஆதரவாளரும் எம்.பியுமான சஞ்சய்ராவத் தெரிவித்துள்ளார். பணமோசடி தொடர்பாக 3 அமைச்சர்கள் மீது மகாராஷ்டிர அரசு அமலாக்கத் துறையினரிடம் புகாரளித்தும் எந்த ரெய்டும் நடைபெறவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

உடல்நிலை சரியில்லாத செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட விதம் மனிதாபிமானமற்றது எனவும் எதிர்கட்சித் தலைவர்கள் மீதான தொடர்தாக்குதலின் ஒரு பகுதியே இது எனவும் கூறி ஆம்ஆத்மி கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பாஜக செயல்படுவதாகவும், செந்தில் பாலாஜி உட்பட ஜனநாயக விரோதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைத்து எதிர்கட்சித் தலைவர்களுடனும் தோளோடு தோள் நிற்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக செந்தில் பாலாஜி இல்லத்தில் நடத்தப்பட்ட ரெய்டுக்கு, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகிய முதலமைச்சர்களும், மல்லிகார்ஜூன கார்கே, சரத்பவார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com