உ.பியின் 100 தொகுதிகளில் போட்டியிடும் ஓவைசி கட்சி,..பாஜகவுக்கு சாதகமாகுமா என அச்சம்.! 

உ.பியின் 100 தொகுதிகளில் போட்டியிடும் ஓவைசி கட்சி,..பாஜகவுக்கு சாதகமாகுமா என அச்சம்.! 

உத்தரப் பிரதேசத்தில் அசாதுதின் ஓவைசி 100 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று கூறியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் ஆளும் பாஜகவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த மாநிலத்தில் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. 

இந்நிலையில் ஹைதராபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏ. ஐ.எம். ஐ.எம் கட்சியின் தலைவருமான அசாதுதின் ஓவைசி உத்தரப் பிரதேசத்தின் 100 தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் தொடர்பாக வேறு எந்த கட்சியுடனும் நாங்கள் ஆலோசனை நடத்தவில்லை என்றும் தெரிவித்தார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

ஓவைசி கட்சி தனித்துப் போட்டியிடுவது இஸ்லாமியர் வாக்குகளைப் பிரித்து பாஜகவின் வெற்றிக்கு  வழிவகுக்கும் என்று விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது உத்தரப் பிரதேசத்தில் ஓவைசி தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது பாஜகவுக்கு சாதகமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.