ஐநா சபையில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிக்க பெண்கள் காரணம்: பிரதமர் மோடி பெருமிதம்...

நூறு கோடி  தடுப்பூசி இலக்கை எட்டிய  பின்னர், இந்தியா புதிய முன்னேற்றத்தை கண்டு இருப்பதாக  பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

ஐநா சபையில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிக்க பெண்கள் காரணம்: பிரதமர் மோடி பெருமிதம்...

மன்கிபாத் என்னும் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக, பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில்  நாட்டு மக்களிடம் உரையாடி வருகிறார். அந்தவகையில் 82வது தொடரான இன்று, நூறு கோடி தடுப்பூசி இலக்கை எட்ட கடினமாக உழைத்த  முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இலக்கை அடைந்ததன் மூலம் இந்தியா புதிய உந்து ஆற்றல் பெற்று, முன்னோக்கி செல்வதாகவும் பெருமை தெரிவித்தார். தடுப்பூசி திட்டம் வெற்றிப்பெற்றது மூலம் இந்தியாவின் திறன் உலகிற்கு வெளிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

தொடர்ந்து வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்த மோடி,  தேசிய  ஒற்றுமை தினத்தை முன்னிட்டு,   மக்கள் நாட்டின் ஒற்றுமைக்காக ஏதாவது ஒரு செயலை புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியாவின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக, தேசிய அளவில் ரங்கோலி போட்டிகள் நடைபெறும் என தெரிவித்தார். அதுமட்டுமல்லாது இந்தியாவை ஒருங்கிணைக்கும் விதமாக தாலாட்டு பாடல் போட்டிகளும் நடத்தப்படும் என கூறினார்.  காவல் படைகளில் பெண்கள் இணைவது இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிக்க, பெண்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் மோடி பாராட்டினார். 

தொடர்ந்து பேசிய மோடி, மறுவரையறை செய்யப்பட்ட டிரோன் தொழில்நுட்பம் மூலம்,  தடுப்பூசி விநியோகம் மற்றும் விவசாயத்திற்கு டிரோன் பயன்படுத்தப்படுவதாக கூறினார். எனவே மத்திய அரசின் புதிய டிரோன் கொள்கையை இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.