மறைந்த முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் குறித்து பாமக தலைவர்......

மறைந்த முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் குறித்து பாமக தலைவர்......

இராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தனித்தன்மையான பெருமைகள்:

இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் சரத்யாதவ் ஆவார்.  50 ஆண்டுகளுக்கும் கூடுதலான அரசியல் அனுபவம் கொண்டவர்.  காங்கிரஸ் கட்சியை எதிர்க்க பலரும் அஞ்சிய காலத்தில்   ஜே.பி. என்றழைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து அரசியல் செய்தவர்.  ஜே.பி. இயக்கத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வேட்பாளர் சரத் யாதவ்.  

1981-ஆம் ஆண்டு அமேதி தொகுதி இடைத்தேர்தலில் ராஜீவ்காந்தி முதன்முறையாக போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்டவர் என்பன உள்ளிட்ட பல பெருமைகள் சரத்யாதவுக்கு உண்டு.  சரண்சிங், வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்களின் நன்மதிப்பை பெற்ற தலைவர் சரத் யாதவ்.

சமூக அக்கறை:

அரசியலுக்கு வந்த காலத்திலிருந்தே சமூகநீதியில் அக்கறை கொண்டவர்.  நாடு தழுவிய அளவில்  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை முழுமையாக ஆதரித்தவர்.  

இதற்காக நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தவர். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட சமூகநீதி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள், மாநாடுகளில் கலந்து கொண்டவர்.  2000-ஆவது ஆண்டில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின்  தலைவராக என்னை தேர்ந்தெடுக்க முன்மொழிந்த தேசியத் தலைவர்களில் சரத் யாதவும் ஒருவர்.

மறைவுக்கு இரங்கல்:

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளை அவர் மிகவும் நேசித்தார்.  என் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.  சரத்யாதவின் மறைவு சமூகநீதிக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   இதற்கு இதுதான் முடிவா?!!