மம்தாவால் கைவிடப்பட்ட பார்த்தா.....

கடந்த ஐந்தாண்டுகளாக பாஜகவையே பயங்கரமாக எதிர்த்து பெண் சிங்கம் போல ஆட்சி செய்து வந்த மம்தாவையே அதிர செய்துள்ளது பார்த்தா சாட்டர்ஜியின் ஊழல் வழக்கு.

மம்தாவால் கைவிடப்பட்ட பார்த்தா.....

பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்கள் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் தொடர்ந்து எதேனும் குழப்பங்களை பல்வேறு வழிகளில் பாஜக ஏற்படுத்தி வருகிறது.  மகாராஷ்டிராவில் உள்கட்சி பூசலை ஏற்படுத்தியது. தற்போது மேற்கு வங்கம் ஊழல் தொடர்பாக பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது.

ஊழல் தொடக்கமும் விசாரணையும்:

குரூப்-சி மற்றும் டி பணியாளர்கள் நியமனம் மற்றும் அரசு  உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் சந்தேகம் எழுந்தது.  இதனால் மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில்,  நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணையை சிபிஐ தொடங்கியது. இந்த ஊழலில் பணப் பரிமாற்றம் இருக்கலாம் என்பதால்  அமலாக்க துறையும் இந்த விசாரணையில் ஈடுபட்டது. இந்த ஊழல் நடந்தபோது சாட்டர்ஜி மாநில கல்வி அமைச்சராக இருந்ததால் அவரும் அவரை சார்ந்தவர்களும் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.   

கைப்பற்றப்பட்ட ஆதாரங்களும் மறுப்பும்:

ஜூலை 22 அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் 11 மணிநேரம் பார்த்தாவின் வீட்டிலும் அவருடைய உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டிலும் அவர்களுடன் தொடர்புடைய 9 பேர் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.  அந்த சோதனையின் போது அர்பிதா முகர்ஜியின் இரு வீடுகளிலிருந்து 21 கோடி ரூபாய் மற்றும் 29 கோடி ரூபாய்  கைப்பற்றப்பட்டது. பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டில் இருந்து ஆவணங்கள், பத்திரங்கள் போன்றவற்றையும் அமலாக்கதுறை கைப்பற்றியுள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழலில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், மீட்கப்பட்ட பணம் தனக்கு சொந்தமானது இல்லை என்றும் கூறியுள்ளார்.

அவருடைய உதவியாளர் அர்பிதா முகர்ஜி அமலாக்க துறை அதிகாரிகளிடம் கைப்பற்றபட்ட பணம் எவ்வாறு அவருடைய வீட்டில் வந்தது என தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் அவர் பார்த்தா சாட்டர்ஜியின் ஆள் வந்து தனது வீட்டில் பணத்தை வைத்திருக்கலாம் எனவும் ஆனால் அந்த அறைகளுக்குள் செல்ல தான் அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 பார்த்தா சாட்டர்ஜி எந்த தவறையும் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை, மேலும் தான் ஒரு சதியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து கூறி வருகிறார். பணம் என்னால் ஊழல் செய்யப்பட்டது அல்ல எனவும் காலம் வரும்போது உண்மை தெரியும் எனவும் கைது செய்யப்பட்ட பின்னர் சாட்டர்ஜி வருத்தத்துடன் கூறியுள்ளார். 

கைதும் கட்சியால் கைவிடப்பட்ட பார்த்தாவும்:

பார்த்தா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் கட்சி மற்றும் அமைச்சரவை பதவிகளில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் அவரை நீக்கியுள்ளது.

இந்த ஊழலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ,அவருடைய மருமகனும் கட்சியின் தேசிய தலைவருமான அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கும் பங்கு இருப்பதாக  திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் பாஜக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருவதால் திரிணாமுல் காங்கிரஸ் பார்த்தாவை விலக்கி வைத்து விட்டதாக விமர்சனங்கள் எழ தொடங்கியுள்ளது.

திரிணாமுல் எம்.பியின் விளக்கம்:

பார்த்த சாட்டர்ஜி கட்சிக்கு தர்மசங்கடத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தி விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ்  எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவருமான சவுகதா ராய், கூறியுள்ளார்.  பார்த்தா ஏதோ சதித்திட்டத்தில் பலியாகிவிட்டாரா என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவருக்கு எதிராக யார் சதி செய்வார்கள்? அவர் என்ன சொல்ல முயற்சிக்கிறார்? எனபது புரியவில்லை எனவும் ராய் தெரிவித்துள்ளார்.  அவரது உதவியாளரின் வீட்டில் இருந்து பணம் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய இந்த நிலைக்கு அவரே பொறுப்பு என்றும் சௌகதா ராய் தெளிவுபடுத்தியுள்ளார்.