பெகாசஸ் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் - ராகுல் காந்தி

இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக பெகாசஸ் என்னும் ஆயுதத்தை ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு மோடியும், அமித்ஷாவும் பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

பெகாசஸ் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் - ராகுல் காந்தி

டெல்லியில் நாடாளுமன்ற எதிர்கட்சி உறுப்பினர்களின் குழு கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிவசேனா உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இதில் தற்போது புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை போன்ற பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்தும் வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்துக் கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெகாசஸ் என்பது தேசியவாதம் மற்றும் தேசத்துரோகம் தொடர்பான விஷயம் என்று குறிப்பிட்டார். பெகாசஸ் என்னும் ஆயுதம் ஜனநாயகத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இது தனியுரிமைக்கான பிரச்சனை அல்ல என்றும் இதனை தேச விரோத செயலாகவே பார்ப்பதாகவும் கூறினார்.

மேலும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த ஜனநாயகத்தின் ஆத்மாவை தாக்கியுள்ளதாக சாடிய ராகுல், பெகாசஸ் என்னும் ஆயுதம் இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு மோடியும், அமித்ஷாவும் பதிலளித்தே ஆக வேண்டும் எனவும் தெரிவித்தார்.