யானை லட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி ...

யானை லட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி ...

புதுச்சேரியில் நேற்று உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் லட்சுமி யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பக்தர்கள் பால் ஊற்றியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மணக்குள விநாயகர் கோயிலின் நடை இன்று திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

லட்சமி யானை :

கடந்த 1997-ஆம் ஆண்டு 6 வயதாக இருக்கும் போது லட்சுமி என்ற பெண் யானை, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த யானை அன்றுமுதல் இன்றுவரை கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அன்புக்கு பாத்திரமாக இருந்து வந்தது. மேலும், தந்தத்துடன் கூடிய லட்சுமி யானை, காலில் கொலுசு அணிந்தும், நெற்றிப் பட்டம் அணிந்தும் ஆசி வழங்கும் அழகே தனிதான்.கோயில் வாசலில் லட்சுமி யானை நின்று  பொதுமக்களுக்கு ஆசிர்வாதம் செய்தும் அன்பை வெளிப்படுத்தியும் வந்திருந்தது.

லட்சுமி உயிரிழப்பு :

புதுச்சேரியில் மிகவும் பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. 32  வயதான லட்சுமி யானையின் உயிரிழப்பு புதுச்சேரி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்திய நிலையில், லட்சுமி யானையின் உடல்  வனத்துறை அருகே உள்ள இடத்தில் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டு எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்ற லட்சுமி யானை பிரியாவிடை பெற்றது.

லட்சுமியின் உடலுக்கு அஞ்சலி :

மணக்குள விநாயகர் கோயில் யானையின் உடலுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதனால், சோகத்தில் ஆழ்ந்த பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் யானை லட்சுமியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாகன் சக்திவேல் கதறி அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது.

மீண்டும் பக்தர்கள் தரிசனம் :

கோயில் வாசலில் லட்சுமி யானை நின்று ஆசிர்வாதம் செய்தும் அன்பை வெளிப்படுத்திய இடத்தில் பக்தர்கள் பொதுமக்கள் பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.அதேபோன்று லட்சுமி யானை புதைக்கப்பட்ட இடத்திலும் காலையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பால் ஊற்றியும், பூக்களை தூவியும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 25 ஆண்டுகள் மணக்குள விநாயகர் ஆலயத்தில் இருந்து மக்களின் மனங்களை கவர்ந்த யானை லட்சுமி இறந்தாலும் மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளது.இந்நிலையில் லட்சுமி யானை உயிரிழந்ததால் நடை மூடப்பட்ட பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தின் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com