டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதி... விவசாயிகள் குவிவதால் தலைநகரில் பதற்றம்...

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது.

டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதி... விவசாயிகள் குவிவதால் தலைநகரில் பதற்றம்...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.  இந்த புதிய சட்டங்களால் தங்களது வாழ்வாதாரம் பறிபோகும் என்றும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 6 மாதங்களாக  தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தும் விவசாயிகள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். ஆனால் எக்காரணம் கொண்டும் வேளாண் சட்டங்கள் திரும்ப பெற மாட்டாது என்று மத்திய அரசும் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
 
இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கான எவ்வித அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை தெரிவித்து வந்தது. ஆனால், டெல்லி அரசு விவசாயிகளின் போராட்டத்திற்கு அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. 
 
இது குறித்து டெல்லி பேரிடர் மேலாண்மை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாயிகள் ஜந்தர் மந்தர் பகுதியில் காலை 11முதல் மாலை 5 மணி வரை இன்று தொடங்கி ஆகஸ்ட் 9 வரை போராட்டம் நடத்த அனுமதியளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த போராட்டத்தில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 200 பேர் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது.