பெட்ரோல், டீசல் விலை உயர்வு... மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் தரப்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் வழக்கமான நிலையே காணப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு... மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்!!

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு தொழிலாளர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்று முழு அடைப்பு மற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் பொது போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது, முக்கியமான வணிக நிறுவனங்கள் அடங்கியுள்ள பகுதிகள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இன்று காலை மேற்குவங்கத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது.

இதேபோல் கேரளாவிலும் பொதுப்போக்குவரத்து மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயங்காததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடிய நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவிலும் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது உள்ளிட்ட மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அம்மாநிலத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் டெல்லியை பொருத்தவரை முழு அடைப்பு நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என கூறப்படுகிறது.

டெல்லியில் வழக்கம்போல பேருந்து மற்றும் ரயில்கள் உள்ளிட்டவை இயக்கப்படுகின்றன. இதேபோல் தனியார் வாகனங்களான கால் டாக்ஸி, ஆட்டோ, இ-ரிக்க்ஷா  உள்ளிட்டவையும் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. இருப்பினும்  பெரும்பாலான வங்கிகளின் சேவைகள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி தானியங்கி முறையில் பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் வசதிகள் சீர்படுத்தபட்டுள்ளதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.