அனுமதியின்றி புது மருமகள் அறையில் புகுந்த போலீசார்... அதிர்ச்சியில் மயங்கிய மாமியார்...

திருமண வீட்டில் புகுந்து போலீசார் மதுபான பாட்டில்களை தேடி ரெய்டு நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அனுமதியின்றி புது மருமகள் அறையில் புகுந்த போலீசார்... அதிர்ச்சியில் மயங்கிய மாமியார்...

பீகார் மாநிலம் ஹாஜிபூர் நகரில் ஹத்சர்கன்ஞ் எனும் பகுதியில் உள்ள ஷீலா தேவி என்பவரின் வீட்டில் கடந்த வியாழக்கிழமையன்று இரவு வைஷாலி காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீசார் மது பாட்டில்களை தேடி ரெய்டு நடத்தினர். ஷீலா தேவியின் மகனுக்கு திருமணம் நடந்து 5 நாட்கள் தான் ஆகிறது. போலீசார் ரெய்டு நடத்துவதற்காக ஷீலா தேவி வீட்டின் படுக்கையறைக்குள் அனுமதியின்றி சென்றுள்ளனர். அந்த நேரத்தில் வீட்டின் புதிய மருமகளான பூஜா குமாரி இருந்துள்ளார்.

அதே நேரத்தில் பெண்கள் மட்டுமே இருந்த அந்த வீட்டுனுள் போலீசார் நுழைந்த போது பெண் போலீசார் யாரும் அவர்களுடன் இருக்கவில்லை. படுக்கையறைக்குள் இருந்த மெத்தை, அலமாறி, சூட்கேஸ், மேஜை என ஒவ்வொரு இடமும் விடாமல் அவர்கள் மது பாட்டிலை தேடி சோதனை நடத்தினர்.

போலீசார் திடீரென வந்து சோதனையிட்டதை பார்த்த பூஜாவும், ஷீலாவும் எதை தேடுகிறீர்கள் என கேட்டதற்கு, அமைதியாக இருங்கள் என மிரட்டலான தொனியில் பேசி, நாங்கள் இங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மது பாட்டில்களை தேடிக் கொண்டிருப்பதாக பதிலளித்தனர்.  
இதனிடையே ஷீலா தேவி தங்கள் வீட்டில் குடிப்பவர்கள் யாரும் கிடையாது, அனுமதியில்லாமல் இப்படி சோதனை செய்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தாதீர்கள் என கூறியதையும் பொருட்படுத்தாமல் போலீசார் தங்களின் சோதனையை தொடர்ந்து கொண்டிருந்தனர்.

போலீசாரின் செயலால் உணர்ச்சிவசப்பட்ட ஷீலா தேவி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.அப்போதும் போலீசார் தங்களின் செயலை தொடர்ந்து கொண்டிருந்ததாக மருமகள் பூஜா குறிப்பிட்டார். எங்கள் வீட்டில் யாருக்கும் குடிப்பழக்கம் இல்லை என்ற போதிலும் போலீசார் இப்படி செய்திருக்கிறார்கள். போலீசாரின் நடவடிக்கையால் எங்களுக்கு அவமதிப்பு ஏற்பட்டிருப்பதாக பூஜா குறிப்பிட்டார்.

பீகார் போலீசார் மணமகளின் படுக்கை அறைக்குள் புகுந்து மதுபாட்டில்களை தேடி சோதனை நடத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.