மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி; தடுத்து நிறுத்திய போலீசார்!

மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி; தடுத்து நிறுத்திய போலீசார்!

மணிப்பூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்ற வாகனம் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் குகி பழங்குடி மற்றும் மெய்டி இனத்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 3 மாதங்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர், சுராஜத்பூர், இம்பால் உள்ளிட்ட இடங்களில் முகாம்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து அங்கேயே தங்கவும், சிவில் சமூக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இம்பால் செல்லும் வழியில் 20 கிலோ மீட்டருக்கு முன்னதாக பிஷ்ணுபூரில் ராகுல்காந்தி சென்ற வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. பயணப்பாதையில் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில், பயணத்தைத் தொடர ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து மேற்கொண்டு பயணத்தைத் தொடர, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரசின் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால், ராகுல் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன் எனத் தெரியவில்லை எனவும் தங்களை அனுமதிக்கும் நிலையில் போலீசார் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். சாலையின் இருபுறமும் மக்கள் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், தடுக்கப்பட்டது ஏன் என உரிய விளக்கமளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


இதையும் படிக்க:மீண்டும் இணையும் யுவன் அமீர் கூட்டணி!