
உக்ரைன் - ரஷ்யா போர் சூழலுக்கு மத்தியில், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு, 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்றிரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி புறப்பட்டார்.
இன்று காலை பெர்லின் சென்றடைந்த அவருக்கு, விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெர்மனின் புதிய பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்திக்கும் பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடஉள்ளார்.
மேலும், இந்தியா-ஜெர்மன் அரசுகளுக்கு இடையிலான 6வது ஆலோசனை கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பாதுகாப்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து, ஓலப் ஸ்கால்சுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடி, மூன்று நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடுகிறார். இந்த காலகட்டத்தில் அந்நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என மொத்தம் 25 நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.