தொடர்ந்து 9 வது முறையாக கொடியேற்றி உரையாற்றினார் பிரதமர் மோடி!

இரண்டாவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி, 75வது சுதந்திர ஆண்டை ஒட்டி, 9வது முறையாக, தேசியக் கொடியை ஏற்றினார். பின், ஊக்கமளிக்கும் வகையில், தனது உரையாற்றினார் பிரதமர் மோடி.

தொடர்ந்து 9 வது முறையாக கொடியேற்றி உரையாற்றினார் பிரதமர் மோடி!

1947, ஆகஸ்ட் 15ம் தேதி, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. சுமார் 200 ஆண்டுகளாக, அன்னியர்களின் கைபிடியில் இருந்த நம் நாடு, ஜனநாயக நாடானது இன்று தான். இன்றோடு, 75 ஆண்டுகள் கடந்து, தற்பொது உலகின் மிகப்பெரும் செல்வாக்கு மிக்க நாடாக உருவெடுத்து நிற்கிறது இந்தியா.

பிரதமர் உரை:

சுதந்திர இந்தியாவின் 14வது பிரதமரான நரேந்திர மோடி, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்த முதல் பிரதமராக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, செங்கோட்டையில் தொடர்ந்து 9வது முறையாக மூவர்ண கொடியை ஏற்றி, தனது உரையாற்றினார்.

இந்தியர்கள் அனைவருக்கும், சுதந்திர தினத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்த நிலையில், இந்த நாள், ஒரு புதிய தீர்மானத்துடன் புதிய திசையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள் எனக் கூறினார்.

செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி:

கடமையின் பாதையில் தங்கள் இன்னுயிரை ஈந்த மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோருக்கு நாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

ராணி லக்ஷ்மிபாய், ஜல்காரி பாய், சென்னம்மா, பெகன் ஹஸ்ரத் மஹால் என இந்தியப் பெண்களின் வலிமையை நினைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு இந்தியாவும் பெருமிதம் கொள்கிறது.

மங்கள் பாண்டே, தாத்யா தோபே, பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஷ்பகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் ஆங்கிலேய ஆட்சியின் அடித்தளத்தை அசைத்த நமது எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு இந்த தேசம் நன்றி செலுத்துகிறது.

தலைவணங்கும் நாள்:

சுதந்திரத்திற்காகப் போராடியவர்களோ அல்லது தேசத்தைக் கட்டியெழுப்பியவர்களோ சரி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், நேரு ஜி, சர்தார் படேல், எஸ்.பி.முகர்ஜி, எல்.பி.சாஸ்திரி, தீன்தயாள் உபாத்யாயா, ஜே.பி. நாராயண், ஆர்.எம். லோகியா, வினோபா பாவே, நானாஜி தேஷ்முக், சுப்ரமணிய பாரதி போன்ற சிறந்த ஆளுமைகளுக்கு முன் தலைவணங்க இது ஒரு சிறந்த நாளாக இருக்கும் எனக் கூறினார்.

விலைமதிப்பற்ற திறன் கொண்ட நாடு!

இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை மீண்டும் வலியுறுத்திய மோடி, 75 ஆண்டுகால பயணத்தில் பல சவால்களை எதிர்கொண்டதாகவும், விலைமதிப்பற்ற திறன் கொண்ட நாடு என்பதை நிரூபித்துள்ளதாகவும் கூறினார்.

நாம் சுதந்திரம் அடைந்தபோது, ​​நமது வளர்ச்சிப் பாதையில் சந்தேகம் கொண்ட பலர் இருந்தனர். ஆனால், இந்நாட்டு மக்களிடம் வித்தியாசமான ஒன்று இருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த மண் சிறப்பு வாய்ந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.  130 கோடி இந்தியர்களின் திறனால், இந்தியா மீது ஒரு நம்பிக்கை உருவாகி இருக்கிறது.

முன்னுதாரணமாக இருக்கிறோம்:

2047ம் ஆண்டில், இந்தியா, தனது 100வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் போது, 50 வயதாக இருக்கும் இளைஞர்கள், நம் நாட்டை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் கூறினார். ஏன் என்றால், முதன்முறையாக பேசும்போது “ஸ்வச்ச பாரத்”, அதாவது தூய இந்தியா இயக்கம் பற்றி உரையாற்றினேன். இன்று அது ஒரு பெரிய இயக்கமாகி, இன்று உலகத்திற்கு முன்னுதாரணமாக இந்தியா இருக்கிறது.

பஞ்ச பிராணம்:

அவ்வகையில், இந்தியா வளர்ச்சி அடைய, நாட்டு மக்கள், ஐந்து உறுதிமொழிகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  1. இந்தியாவின் வளர்ச்சிக்காக பெரிய தீர்மானங்கள் கொண்டு, உறுதியுடன் முன்னேற வேண்டும்.

  2. அடிமைத்தனத்தின் அனைத்து தடயங்களையும் துடைத்தெறிய வேண்டும்

  3. நமது பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும்

  4. ஒற்றுமையின் வலிமை அறிந்திருக்க வேண்டும்

  5. குடிமக்களின் கடமைகள் சரியாக ஆற்றப்பட வேண்டும். இதில், பிரதமர் மற்றும் முதல்வர்கள் ஆகியோரும் அடங்குவர்.

இந்த ஐந்து உறுதிமொழிகளை அனைத்து இந்தியர்களும் சரியாக கடைப்பிடித்தால், நம் நாட்டு, உலகம்  போற்றும் சிறந்த நாடாக அமையுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். சுதந்திர இந்தியாவில், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற மோடி, மக்கள் முன்னிலையில், தனது உரையாற்றி, தேசியகீதம் பாடினார்.