முதன் முறையாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்திக்க இருக்கும் பிரதமர் மோடி...

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இம்மாத இறுதியில் அமெரிக்கா பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதன் முறையாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்திக்க இருக்கும் பிரதமர் மோடி...

கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த பிரதமர் மோடி, கொரோனா இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் அமெரிக்கா பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோபைடன் முதல் முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி அமெரிக்கா பயணிப்பது இதுவே முதல் முறையாகும். இணைய வழியில் நடைபெற்ற குவாட் மற்றும் ஜி7 உச்ச மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆகியோர் பங்கேற்றுள்ள நிலையில் முதல் முறையாக நேரடி கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 

ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக உள்ள இந்தியா ஆகஸ்ட் மாத்துக்கான தலைமை பொறுப்பை ஏற்றது. இந்நிலையில் இம்மாதம் நடைபெறவுள்ள ஐநா சபையின் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இம்மாதம் 23 ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. 

இது குறித்து கூறிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, மோடியின் அமெரிக்க பயணத்தின் போது குவாட் நாடுகளின் உயர்மட்ட கூட்டத்துக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதில் மோடி பங்கேற்க கூடும் எனவும் கூறினார். இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு 'ஹவுடி மோடி' என்ற கலாசார நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடதக்கது.