
பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்.
மூன்று நாள் பயணம் மேற்கொள்ளும் மோடி:
நடப்பாண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக அரசும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தேர்தல் வியூகத்தை வகுத்து வருகின்றன. இந்த சூழலில், குஜராத் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொள்கிறார். மோதேரா பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர், 3 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதையும் படிக்க: திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது...ஆளுநரை சாடிய வைகோ!
முக்கியமாக,இந்நிகழ்ச்சியில் நாட்டிலேயே முதல் முறையாக சூரியசக்தியில் இயங்கும் கிராமமாக மோதேரா கிராமத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கிறார். இதனைத்தொடர்ந்து அகமதாபாத், பருச் மற்றும் ஜாம்நகருக்கும் பிரதமர் பயணிக்கிறார். அதேபோல், நாளை மறுநாள் அகமதாபாத்தின் அசர்வாவில் உள்ள பொது மருத்துவமனையில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
இதன்பின்னர் குஜராத்திலிருந்து மத்தியபிரதேசத்திற்கும் மோடி செல்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.