இந்த மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம்? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கென தனி கல்வி வாரியம் அமைப்பது குறித்து, மாணவர்கள் நலன் கருதி யூனியன் பிரதேச அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இந்த மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம்? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு   

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், தமிழ்நாடு அரசின் கல்வி முறையே பின்பற்றப்படுகிறது. இதனால், புதுச்சேரிக்கு என தனி கல்வி வாரியம் அமைக்க கோரி ஸ்ரீதர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், குறிப்பாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு என தனி பாட திட்டத்தை வகுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, புதுச்சேரியில் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, தனி கல்வி வாரியம் அமைப்பது மாணவர்களின் நலனுக்கு சிறப்பானதாக இருக்கும் என்ற போதும், இதுசம்பந்தமாக அரசு அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

இதுதொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை செயலாளருக்கு நான்கு வாரங்களில் புதிய கோரிக்கை  மனுவை அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், யூனியன் பிரதேசத்தில் அதிகரித்துள்ள பள்ளிகள் எண்ணிக்கை, தனிப்பட்ட பாட திட்டம் வழங்குவதின் தேவை ஆகியவற்றை பரிசீலித்து, 12 வாரங்களில் தகுந்த முடிவை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு, விரைந்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.