
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கென பல்வேறு அரசியல் கட்சியினர், தேர்தல் யுத்திகளை வகுத்து பரபரப்புரையை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் 5 மாநில தேர்தல்களை முன்வைத்து, காங்கிரஸ் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட பொது கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, மத்திய அரசு குறிப்பிட்ட ஒரு சில தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக வேலை செய்வதாக குற்றஞ்சாட்டினார். விளம்பரத்திற்கென கோடிக்கணக்கில் பணத்தை செலவிடும் மத்திய அரசு அதனை விவசாயிகளுக்கு ஏன் வழங்க கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார். பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை ஏற்றத்தை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு பிரியங்கா கண்டனம் தெரிவித்தார்.
முன்னதாக பேரணியில் பங்கேற்பதற்காக விமான நிலையம் வந்த சோனியா மற்றும் ராகுல் ஆகியோருக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.