லக்கிம்பூர் சம்பவம் குறித்து குடியரசு தலைவரிடம் முறையிட்ட ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு...

லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் குழு நேரில் சந்தித்து முறையிட்டுள்ளது. 
லக்கிம்பூர் சம்பவம் குறித்து குடியரசு தலைவரிடம் முறையிட்ட ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு...
Published on
Updated on
1 min read

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில், விவசாயிகளின் போராட்டத்திற்கு இடையே நடந்த வன்முறையில், வாகனம் மோதி 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதில் மத்திய இணை அமைச்சரின் மகன் ஆசிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. தலைமறைவாக இருந்த மிஸ்ரா பின்னர் கைது செய்யப்பட்டார். இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இது திட்டமிட்டு விவசாயிகள் மீது நடத்தப்பட்ட படுகொலை எனவும் காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. 
 
இந்தநிலையில்,  வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி கிடைக்க  வேண்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை அவரது இல்லத்தில் சந்தித்தனர். மாநிலங்களவை  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே,  மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, குலாம் நபி ஆசாத், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கே.சி வேணுகோபால் ஆகியோர் ராம்நாத்தை நேரில் சந்தித்தனர். 

அப்போது, விவசாயிகள் படுகொலை வழக்கு நேர்மையான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதற்காக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ்விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் கொண்ட குழு அமைத்து விசாரிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரியங்கா காந்தி, லக்கிம்பூர் கேரி கலவர பிரச்னை குறித்து மத்திய அரசுடன் இன்றே விவாதித்து தீர்வு காண்பேன் என ஜனாதிபதி உறுதியளித்ததாக தெரிவித்தார்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com