மாணவிகளின் வீடியோ சர்ச்சை...சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை!

மாணவிகளின் வீடியோ சர்ச்சை...சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை!

சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகளின் வீடியோ இணையத்தில் வெளியானதாக, சர்ச்சை எழுந்ததை அடுத்து, விடுதி வார்டன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, செப்டம்பர் 24ஆம் தேதி வரை வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இணையத்தில் கசிந்த வீடியோ:

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதியில், மாணவிகளின் ஆட்சேபனைக்குரிய வீடியோவை மாணவி ஒருவர் செல்போனில் படம் பிடித்து, தனது ஆண் நண்பருக்கு பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதில் 60 மாணவிகளின் வீடியோ இணையத்தில் கசிந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, அதிர்ந்து போன மாணவிகளில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் கடும் ஆத்திரத்துக்கு ஆளான மாணவிகள், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல், போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள்:

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவர்களை சமரசம் செய்ய முயன்றும் பலனளிக்கவில்லை. இதனிடையே சம்பவத்தில் தொடர்புடைய மாணவி, அவரது ஆண் நண்பர் உட்பட 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து செல்போன் விளக்கொளியில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள், போலீசாரின் சமரசம் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.

வார்டன் சஸ்பெண்ட்:

அதன்பயனாக, தற்போது பல்கலைக் கழகத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த விடுதி வார்டன் உட்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அனைத்து வார்டன்களும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாணவிகளின் கோரிக்கைக்கு ஏற்ப விடுதி நேரமும் மாற்றியமைக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகளின் வாக்குமூலங்களை, மாணவ பிரதிநிதிகள் முன்னிலையில் பதிவு செய்ய போலீசார் ஒப்புக்கொண்டதாகவும், பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களிடம் மன்னிப்பு கோர முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாணவியிடம் சிபிஐ விசாரணை:

இதனிடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய சிலர், தங்களை மிரட்டியதாகவும், கனடாவை சேர்ந்த கும்பலுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்பதால், காரணமான மாணவியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக சம்பந்தப்பட்ட மாணவி, அவர் தொடர்புடைய 4 வீடியோக்களை மட்டுமே அவரது ஆண் நண்பருக்கு அனுப்பியதாக, மொஹாலி எஸ்.பி. தெரிவித்ததோடு, அவரது செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com