பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு அபாயம்... நிலக்கரி பற்றாக்குறையை சீராக்க நடவடிக்கை...

பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய அரசு கூறியுள்ளது.

பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு அபாயம்... நிலக்கரி பற்றாக்குறையை சீராக்க நடவடிக்கை...

நாட்டின் மின்சார உற்பத்தியில், 70 சதவீதம் நிலக்கரியை நம்பியே உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பஞ்சாபில் சுழற்சி முறையில் மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 2 நாட்களில் மின்வெட்டை சந்திக்க நேரிடும் என கூறப்பட்டுள்ளது. இதனால், நிலக்கரி பற்றைக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என, பிரதமருக்கு பல்வேறு மாநில முதலமைச்சர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய அரசு கூறியுள்ளது. மின்சார தேவை அதிகரிப்பு, நிலக்கரி சுரங்க பகுதிகளில் கனமழை, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, கையிருப்பில் இருக்கும் நிலக்கரியை படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. நிலக்கரியின் இருப்பு நிலவரத்தை வாரத்திற்கு இருமுறை கண்காணித்து வருவதாகவும், நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.