ரஷிய கார்கள், போலந்து நாட்டினுள் நுழையத் தடை!!

ரஷிய பயணிகளின் கார்கள் போலந்து நாட்டினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் ரஷியாவின் பதிவை பெற்ற கார்கள், தங்களின் 27 உறுப்பு நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்குள் நுழைய ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் தடை விதித்திருந்தது. அதன் படி, போலந்து நாட்டில் நேற்று முதல் தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அந்நாட்டு உள்துறை அமைச்சர் மறியஸ் கமின்ஸ்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, " உக்ரைனில் நடந்து வரும் போர் நடவடிக்கைகளை கண்டித்து, ரஷ்யா மற்றும் அந்நாட்டு மக்கள் மீது விதிக்கப்படும் மற்றொரு தடை இது. சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ரஷ்யா இருந்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

பால்டிக் கடல் பகுதியில் ரஷியாவுடன் எல்லையை பகிர்ந்து வரும் லிதுவேனியா, லாத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில், தற்போது போலந்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தடை நடவடிக்கை " இனவெறித் தாக்குதல்" எனத் ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமித்ரி மெத்வதேவ் கடந்த செவ்வாய்க்கிழமை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.