இந்து மதத்திற்கு மாறிய ஷியா முஸ்லிம் தலைவர்... இந்து மதத்தை வளர்க்கப் போவதாக அறிவிப்பு...

ஷியா முஸ்லிம் வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ இந்து மதத்துக்கு முறைப்படி மாறினார்.

இந்து மதத்திற்கு மாறிய ஷியா முஸ்லிம் தலைவர்... இந்து மதத்தை வளர்க்கப் போவதாக அறிவிப்பு...

உ.பி.யில் அதிகமுள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவராக இருப்பவர் சையது வசீம் ரிஜ்வீ. ஷியா மத்திய வக்ஃபு வாரியத் முன்னாள் தலைவரான இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்றவர்.

இவர் அயோத்தி வழக்கில் ராமர் கோயிலுக்கு ஆதரவாக பேசினார். இதனால் முஸ்லிம் மவுலானாக்கள் இவரை காஃபீர் (முஸ்லிம் அல்லாதவர்) என மதத்திலிருந்து ஒதுக்கினர். முஸ்லிம்களின் மறைநூலான திருக்குர்ஆனின் 26 பக்கங்களில் கூறப்படும் கருத்துகள் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அவற்றை நீக்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிஜ்வீ தொடர்ந்த வழக்கால் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ரிஜ்வீக்கு ரூ.50,000 அபராதமும் விதித்தது. இந்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து என போலீஸ் பாதுகாப்பை பெற்ற ரிஜ்வீயை அவரது குடும்பத்தாரும் ஒதுக்கி வைத்தனர்.

இந்நிலையில் ரிஜ்வீ நேற்று காலை காஸியாபாத்தின் மகாகால் தாஸ்னா கோயில் மடத்துக்கு சென்றார். மடத்தின் தலைவர் நரசிம்மானந்த்கிரி மஹராஜ் முன்னிலையில் இந்து மதத்துக்கு மாறினார். திரளான சாதுக்களும், இந்துத்துவாவினரும் இதில் கலந்துகொண்டனர். இந்த சடங்கு களில் ரிஜ்வீக்கு பூணூலும் அணிவிக் கப்பட்டது. பிறகு நரசிம்மானந்த்கிரி அறிவித்தபடி தனது பெயரை 'ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி' என மாற்றிக்கொண்டார் ரிஜ்வீ. மதமாற்ற சடங்கில் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகமும் செய்த ரிஜ்வீ பிறகு யாகம் வளர்த்து பூஜையும் செய்தார்.

இதுகுறித்து 'இந்து தமிழ்' நாளிதழிடம் ஜிதேந்தர் நாராயண் சிங் கூறும்போது, 'இஸ்லாத் திலிருந்து வெளியேற்றப்பட்டதால் எனது விருப்பப்படி இந்துவாக மாறி விட்டேன். உலகின் மிகப்பெரிய புனித மதமாக சனாதன தர்மம் உள்ளது. இஸ்லாம் ஒரு மதமே அல்ல. இனி இந்து மதத்தை வளர்க்க பாடுபடுவேன்' என்றார்.

முஸ்லிம்களின் இறைத்தூதரான முகம்மது நபி பற்றி 'முகம்மது'என்ற பெயரில் ரிஜ்வீ கடந்த நவம்பர் 4-ம் தேதி வெளியிட்ட நூல் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது கூட உ.பி. ஷியா வக்ஃபு வாரியத்தின் உறுப்பினராக 21 மசூதிகளின் முத்தவல்லிகள் சார்பில் ரிஜ்வீ தேர்வு செய்யப்பட்டி ருந்தார். இந்த வாரியத்தில் அவர் தலைவராக இருந்தபோது வக்ஃபு நிலம் விற்றதில் ஊழல் புகார் எழுந்தது. இதில் ரிஜ்வீ மீதும் பதிவான வழக்குகள் உ.பி. பாஜக அரசால் சிபிஐக்கு மாற்றப்பட்டது. தன் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என ரிஜ்வீ அளித்த கோரிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்காதது குறிப்பிடத்தக்கது.