சிவசேனா எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை...!

சிவசேனா எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை...!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலம் மோசடி:

மும்பை கோரேகாவில் உள்ள பத்ரா சால் குடிசை பகுதியை மறு சீரமைக்கும்  பணியில் ஈடுபட்ட  குரு ஆஷிஸ் என்ற கட்டுமான நிறுவனம், குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய  ஆயிரத்து 34 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கடந்த பிப்ரவரி மாதம், சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவரான தொழில் அதிபர் பிரவின் ராவத்தை கைது செய்தது. 

அமலாக்கத்துறை விசாரணை:

அதனைத்தொடர்ந்து சஞ்சய் ராவத் குடும்பத்தினரின் சுமார் 11 கோடி ரூபாய் சொத்துகளும் முடக்கப்பட்டன.  இந்த வழக்கில் சஞ்சய் ராவத்திடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.  கடந்த  27-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு பின் ஆஜராவதாக சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையிடம் தெரிவித்திருந்தார்.

சஞ்சய் ராவத் வீட்டில் அதிரடி சோதனை:

அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு பின் ஆஜராவதாக சஞ்சய் ராவத் கூறியிருந்த நிலையில், மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீடு உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் 3 குழுவாக பிரிந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  

சஞ்சய் ராவத் ட்விட்:

அமலாக்கத்துறையின் இந்த திடீர் நடவடிக்கையை கண்டித்து சஞ்சய் ராவத் ட்விட் செய்துள்ளார். அதில் பொய்யான ஆதாரத்துடன் தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாகவும், ஊழலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளார். செத்தாலும்  தான் சிவசேனாவை விட்டு விலகவோ, அடிபணியவோ மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.