அனில் அம்பானியின் செல்போன் எண்ணும் ஒட்டுக்கேட்கப்பட்டது... தி வயர் இதழ் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்..

பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ஆகியோரின் செல்போன் எண்களும் பெகாசஸ் உளவு கருவி மூலம் குறிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அனில் அம்பானியின் செல்போன் எண்ணும் ஒட்டுக்கேட்கப்பட்டது... தி வயர் இதழ் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்..
இஸ்ரேல் தயாரித்த பெகாசஸ் உளவு கருவி மூலம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் செல்போன் எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில் இந்தியாவை பொறுத்த வரை எதிர்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகளின் செல்போன் எண்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக தி வயர் உள்ளிட்ட 16 ஊடகங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தற்போது பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ஆகியோரின் செல்போன் எண்களும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தி வயர் இதழ் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ரஃபேல் ஒப்பந்தத்தில் தொழிலதிபர் அனில் அம்பானி ஆதாயம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரது செல்போன் எண் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில அதிகாரிகளின் செல்போன் எண்களும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தி வயர் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் ரஃபேல் போல் விமான தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனின் இந்திய பிரதிநிதி வெங்கட ராவ் பொசினா, முன்னாள் சாப் இந்தியத் தலைவர் இந்தர்ஜித் சியால் மற்றும் போயிங் இந்தியா உரிமையாளர் பிரத்யுஷ்குமார் ஆகியோரின் செல்போன் எண்களும் இந்த பட்டியலில் இருப்பதாக தி வயர் தெரிவித்துள்ளது.