பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீசை பெற்றுக்கொண்ட சபாநாயகர்!!

பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீசை பெற்றுக்கொண்ட சபாநாயகர்!!

பாஜக அரசுக்கு எதிரான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீசை, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக் கொண்டுள்ளார்.

மாநிலங்களவை எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில், பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில், மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவரான கவுரவ் கோகாய், நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீசை மக்களவை செயலகத்தில் அளித்தார். 50 உறுப்பினர்கள் அவையில் ஒப்புதல் அளித்தால் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற பட்சத்தில், அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் இன்று மக்களவைக்கு வர கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுதவிர தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த நாகேஸ்வர ராவும் தனியாக நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீசை அளித்தார்.

தொடர்ந்து அமளியால் காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்ட மக்களவை, மீண்டும் 12 மணிக்கு கூடியது. அப்போது எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் தொடர்பான விவாதம் எழுந்த போது, நோட்டீசை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, தீர்மானம் மீதான விரிவான விவாதம் நடத்துவதற்கான தேதியை விரைவில் தெரிவிப்பதாகவும் அறிவித்தார்.

இதனை எதிர்த்து அவையில் பாஜக உறுப்பினர்கள் கூச்சல் - குழப்பத்தில் ஈடுபட்டதால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதம் நடைபெறும் பட்சத்தில், 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் பாஜக மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால் தீர்மானம் நிறைவேறாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்கான அழுத்தமாகவே, நோட்டீசை அளித்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க || உயிரைப் பறிக்கும் Instant online loan apps... தப்பிப்பது எப்படி?