இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதாக தகவல்.. கடுப்பான இந்திய தூதரகம்

இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதாக இலங்கை ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதாக தகவல்.. கடுப்பான  இந்திய தூதரகம்
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவது,கைது செய்து சிறையில் அடைப்பது போன்று அவர்களை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடுவது ஒரு முடிவில்லா தொடர்கதையாக நடந்து வருகிற ஒன்று.
இந்தநிலையில்,திடீர் திருப்பமாக இலங்கையை சேர்ந்த 13 மீனவர்களை இந்திய கடற்படை தாக்கியதாக புகார் எழுந்ததையடுத்து,அந்த செய்தியை இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.இது குறித்து இலங்கை மீனவர்கள் கூறும்போது, நாங்கள் 13 மீனவர்கள் சேர்ந்து 2 மீன்பிடி படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில்,கடந்த 4-ந் தேதி நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய கடற்படை வீரர்கள் அங்கு வந்து எங்களை அடித்து உதைத்து தாக்குதல் நடத்தினர்.அப்போது,நாங்கள் அனைவரும் மீனவர்கள் என்று கூறிய போதிலும் ,அவர்கள் எங்களை விடுவிக்கவில்லை என்று அவர்கள் கூறியதாக இலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய பிறகு,இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இலங்கை மீன்வள அமைச்சக செயலாளர் இந்து ரத்னநாயகே தெரிவித்தார். ஆனால்,இந்த குற்றச்சாட்டை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுத்து வந்த நிலையில்,அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையில்,இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை தாக்கியதாக வெளியான செய்தி, அப்பட்டமான பொய் என்றும்,அத்தகைய சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும்,இந்திய கடற்படை மிகவும் ஒழுக்கமான முறையில் தனது கடமையை செய்து வருகிறது.
இந்தியா மற்றும் இலங்கை இடையே மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் மனிதாபிமான முறையிலும், பேச்சுவார்த்தை மூலமாகவும் தீர்ப்பதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.