உபரி மின்சாரம் உள்ள மாநிலங்கள் தேவையுள்ள மாநிலங்களுக்கு மின்சாரத்தை கொடுத்து உதவ வேண்டும்: மத்திய அரசு

உபரி மின்சாரம் உள்ள மாநிலங்கள், தேவையுள்ள மாநிலங்களுக்கு மின்சாரத்தை கொடுத்து உதவ வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

உபரி மின்சாரம் உள்ள மாநிலங்கள் தேவையுள்ள மாநிலங்களுக்கு மின்சாரத்தை கொடுத்து உதவ வேண்டும்: மத்திய அரசு

தொடர் மழை, மின்சார தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நாட்டில் நிலக்கரி தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சில தினங்களுக்கு தேவையான நிலக்கரியே இருப்பு உள்ளதாகவும், மின்வெட்டுக்கு வாய்ப்புள்ளதாகவும் மின் விநியோக நிறுவனங்கள் கவலை தெரிவித்து வருகின்றன.

மின்வெட்டை தடுக்க கூடுதல் நிலக்கரி ஒதுக்க வேண்டும் என டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன. அவசர நடவடிக்கையை முன்னெடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளன.  இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் ஆகியோர் தனித்தனியே அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினர். மேலும்  பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும் எனவும் உறுதி கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாநிலங்கள் வசம் உபரி மின்சாரம் இருப்பின் அது பற்றிய தகவல்களை மத்திய அரசுக்கு தெரிவிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதுதவிர்த்து, ஒதுக்கீடு செய்யாத உபரி மின்சாரம் விலைக்கு விற்கப்பட்டாலோ அல்லது அதுகுறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படாவிட்டாலோ அவை தானாக தேவையுள்ள மாநிலங்களுக்கு மறு ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்லாது, அந்த உபரி மின்சாரத்தின் அளவும் குறைக்கப்படும் என கூறியுள்ளது. இதனிடையே அனல்மின் நிலையங்களில் தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்து வரும் புகாரை தொடர்ந்து, அங்குள்ள நிலக்கரி இருப்பு  குறித்து பிரதமர் அலுவலகம் இன்று ஆய்வு மேற்கொள்கிறது.