காலிஸ்தான் பயங்கரவாத அச்சுறுத்தலை அடுத்து கண்காணிப்பு தீவிரம்.. இமாச்சல பிரதேசத்தின் எல்லைகள் மூடல்!

காலிஸ்தான் பயங்கரவாத அச்சுறுத்தலை அடுத்து, இமாச்சல பிரதேச எல்லைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

காலிஸ்தான் பயங்கரவாத அச்சுறுத்தலை அடுத்து கண்காணிப்பு தீவிரம்.. இமாச்சல பிரதேசத்தின் எல்லைகள் மூடல்!

வடமாநிலங்களில் நாளுக்கு நாள் கலவர சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகித்து வரும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இமாச்சல பிரதேசத்தில் நேற்று சட்டமன்ற கட்டடத்தின் நுழைவாயிலில், காலிஸ்தான் கொடி ஒட்டப்பட்டது. மேலும் கொடியை ஒட்டிய மர்ம நபர்கள் கட்டட சுவர்களில் பச்சை மை கொண்டு மிரட்டல் விடும் வகையில் வாசகங்களையும் எழுதினர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, முதலமைச்சர் ஜெய் ராம் தாகூர் உத்தரவின் பேரில் அவை உடனடியாக நீக்கப்பட்டு, சுவர்கள் வெள்ளையடிக்கப்பட்டன. மேலும் சம்பவம் தொடர்பாக முறையே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இந்தநிலையில், பயங்கரவாத அசம்பாவித செயல்கள் நடைபெறுவதை தடுக்க இமாச்சல பிரதேசத்தின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களுடனான எல்லையை மூடிய பாதுகாப்பு அதிகாரிகள், இரவில் இருந்து பேரிகாட்கள் அமைத்து பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் ஓட்டல் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.