மேகதாது விவகாரத்தை விவாதிக்க முடியாது... காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் அறிவிப்பு...

தமிழகத்துக்கு காவிரியில் செப்டம்பர் மாதம் வரை வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேகதாது விவகாரத்தை விவாதிக்க முடியாது... காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் அறிவிப்பு...

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டமானது தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பாக பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சார்பிலும் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இந்தக் கூட்டத்தில் உச்சநதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு தேவையான நீரினை திறந்துவிட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இது காவிரி மேலாண்மை ஆணையத்தை அவமதிக்கும் செயல் என்றும் தமிழக அரசு குற்றம் சாட்டியது.

மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பான விவாதத்தை எழுப்ப கர்நாடக அரசு முயற்சி செய்தபோது அதற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தது.  புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இதனையடுத்து தமிழகத்துக்கு காவிரியில் செப்டம்பர் மாதம் வரை நிலுவையில் இருக்கக்கூடிய  தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டுமென கர்நாடக அரசிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

தமிழகம் உள்ளிட்ட கீழ் நீர்ப்பாசன மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் மேகதாது விவகாரத்தை விவாதிக்க முடியாது என்றும் ஆணையம் தெரிவித்தது. 

மாநிலங்களுக்குள் ஒருமித்த கருத்து வராத வரை மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க முடியும் என காவேரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் திட்டவட்டமாக தெரிவித்தார்.