சீனாவுடனான மோதலில் உயிர் நீத்த தமிழக ராணுவ வீரர் பழனிக்கு வீர சக்ரா விருது வழங்கினார் குடியரசு தலைவர்

கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் உயிர் நீத்த தமிழக வீரர் பழனிக்கு, வீர சக்ரா விருது வழங்கி குடியரசுத் தலைவர் கவுரவித்தார். 

சீனாவுடனான மோதலில் உயிர் நீத்த தமிழக ராணுவ வீரர் பழனிக்கு  வீர சக்ரா விருது வழங்கினார் குடியரசு தலைவர்

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத் தாக்கு பகுதியில் இந்திய - சீன வீரர்கள் இடையே கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களுடைய தியாகத்தைப் போற்றும் வகையில், மத்திய அரசு விருதுகளை அறிவித்தது. அவர்களுக்கான விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. வீரர்களின் வீரதீரச் செயல் மற்றும் உயிர் தியாகத்தை போற்றும் வகையில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.  


கல்வான் பள்ளத் தாக்கு மோதலில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு, வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அவரது மனைவி பெற்றுக் கொண்டார். இதேபோல், சீனா ராணுவ ஊடுருவலின் போது உயிரிழந்த கலோனல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ர விருதும்,  நாயிப் சுபேதார் நுதுராம் சோரன், நாயிக் தீபக் சிங், சிப்பாய் குர்தேஜ் சிங் உள்ளிட்டோருக்கு வீர் சக்ர விருதுகளும் வழங்கப்பட்டன.  நாட்டின் அமைதிக்காக சேவையாற்றியதாக விமானப்படை தளபதி விவேக் ஆர் சவுத்ரிக்கு பரம் விஷிஷ்ட் சேவா பதக்கத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.