நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது மாநிலங்களவை...!

நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது மாநிலங்களவை...!

ராகுல்காந்தி பதவி நீக்க விவகாரம் பூகம்பமாக வெடித்ததால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று முடங்கின.


அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிகிறது என கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரது எம்பி பதவிநீக்கம் செய்யப்படுவதாக அடுத்த நாளே மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து இன்றைய கூட்டத்திற்கு முன்னதாக மாநிலங்களவை எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில், கருப்புச்சட்டை அணிந்து எதிர்கட்சித்தலைவர்கள் ஆலோனை நடத்தினர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் முதன்முதலாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடியது.

இதையும் படிக்க : சபாநாயகர் கேள்விக்கு சமாளித்த வானதி...சட்டப்பேரவையில் நிகழ்ந்த சுவாரசியம்...!

தொடர்ந்து மக்களவை கூடியதும், கருப்புச்சட்டை அணிந்து பதாகைகளுடன் ராகுல்காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் அவை கூடிய ஒரு சில நொடிகளிலேயே 4 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாகக் கூறி ஓம்பிர்லா உடனடியாக வெளியேறினார்.

அதேபோல், மாநிலங்களவையிலும் பதாகைகளை ஏந்தி அவைமுன் சென்று எதிர்கட்சியினர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் அறிவித்தார். தொடர்ந்து 2 மணிக்கு மீண்டும் அவை கூடிய நிலையில், ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.