மத்திய அரசுக்கு 24 மணி நேர கெடு விதித்த உச்ச நீதிமன்றம்... 

24 மணி நேரத்தில் காற்று மாசை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 

மத்திய அரசுக்கு 24 மணி நேர கெடு விதித்த உச்ச நீதிமன்றம்... 

டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக காற்றின் மாசு அளவு அபாய கட்டத்திலேயே நீடித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழில்துறை மற்றும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் நச்சு புகை காற்றின் மாசு அளவை அதிகரிப்பதில் முக்கிய காரணியாக விளங்குவதாக நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். 

அப்போது டெல்லியில் காற்று மாசு அதிகளவில் இருக்கும்போது பள்ளிகளை திறந்தது தொடர்பாக டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. டெல்லியில் இவ்வளவு காற்று மாசு இருக்கும் பொழுது பள்ளிகளை ஏன் திறந்தீர்கள் எனவும் வேலைகளுக்குச் செல்பவர்கள் எல்லாம் வீட்டிலிருந்தே பணிபுரியும்போது குழந்தைகள் மட்டும் கடும் மாசுபாட்டிற்கு மத்தியில் பள்ளிகளுக்கு செல்ல வேண்டுமா? எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இதனிடையே, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா  காற்று மாசு கட்டுப்பாடுகளுக்கு இணங்க மறுக்கும் தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டப்பட்டு வருவதாக கூறினார். மேலும் காற்றின் மாசு அளவை கட்டுக்குள் கொண்டு வர ஜெட் வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

திருப்தியடையாத நீதிபதிகள், மத்திய அரசின் அலட்சிய போக்குக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், 24 மணி நேரத்தில் காற்று மாசை குறைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கெடு விதித்தனர். மேலும் மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நீதிமன்றமே உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் கடுமை காட்டியுள்ளனர்.