வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டதால் பரபரப்பு...

அரியானா மாநிலம் கர்ணாலில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டதால் பரபரப்பு...

மத்திய அரசு திருத்தம் செய்து அறிவித்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அரியானா மாநிலம் கர்ணலில்  உள்ள சுங்கச்சாவடி அருகே விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தியபோது, அங்கு வந்த காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தினர். பலர் காயமடைந்தனர். 

இதனிடையே பாஜக தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ள இடம் நோக்கி  செல்வோரை தடுத்து நிறுத்த அறிவுறுத்திய  கர்ணல் துணை ஆட்சியர் ஆயுஷ் சின்ஹா, மீறுவோரின் தலையில் அடித்து காயப்படுத்தவும் அறிவுறுத்திய வீடியோ வைரலாகி உள்ளது.இந்தநிலையில், காவல்துறையினரின் இந்த செயலை கண்டித்து , அரியானாவின் பல்வேறு பகுதிகளில் விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

விவசாயிகள் மீது இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளின் இரத்தம் சிந்தப்படுவதற்கு, இந்தியா வெட்கி தலை குனிவதாக வேதனை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிப்பதுடன், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.இதேபோல் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கும், அரியானா அரசால் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.