உச்சநீதிமன்ற உத்தரவையும் தீர்ப்பையும் மத்திய அரசு மதிக்கவில்லை: தங்கள் பொறுமையை சோதித்து பார்ப்பதாக நீதிபதி அதிருப்தி...

உச்சநீதிமன்ற உத்தரவையும் தீர்ப்பையும் மத்திய அரசு மதிக்கவில்லை என கடும் அதிருப்தி தெரிவித்துள்ள தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தங்களது பொறுமையை மத்திய அரசு சோதித்து பார்ப்பதாக சாடியுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவையும் தீர்ப்பையும் மத்திய அரசு மதிக்கவில்லை: தங்கள் பொறுமையை சோதித்து பார்ப்பதாக நீதிபதி அதிருப்தி...

ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் அமைக்கக்கோரிய பொதுநல மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி வழக்கு விசாரணையின் போது, அடுத்த பத்து நாட்களுக்குள் காலியாக உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை மத்திய அரசு கட்டாயம் நிரப்ப வேண்டும் என்றும், இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மதிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி,பரிந்துரை அளிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை மத்திய அரசு ஏன் நிரப்பவில்லை? என கேள்வி எழுப்பினர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு விரைந்து ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், அதே நேரத்தில் தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப ஏன் தாமதமாகிறது? எனவும் வினவிய நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவில்லை என்றால் தீர்பாயங்களை மூடி விடலாமா? அல்லது மாற்று ஏற்பாடு தான் என்ன? என கேள்வி கனைகளை தொடுத்தனர்.

இந்த விவகாரத்தில் காலி நியமனங்களை நிரப்ப உத்தரவிடுவது, தீர்பாயங்களை மூடிவிட்டு வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க கூறுவது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது ஆகிய 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம்,தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுக்கு செப்டம்பர் 13-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி,தீர்ப்பாய சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.