என் மகன் குடிப்பழக்கத்தால் போய்விட்டான்...உங்கள் மகளுக்கு வேண்டாம்...வேதனை தெரிவித்த அமைச்சர்!

என் மகன் குடிப்பழக்கத்தால் போய்விட்டான்...உங்கள் மகளுக்கு வேண்டாம்...வேதனை தெரிவித்த அமைச்சர்!

மது அருந்தும் பழக்கத்தால் தனது மகன் இறந்துவிட்டதாக வேதனையுடன் தெரிவித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் கெளசல் கிஷோர், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு தங்கள் பெண்களை யாரும் திருமணம் செய்து  கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

மது அருந்துபவர்களின் வாழ்நாள் வேகமாக குறைந்துவிடும்:

உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் நடைபெற்ற மது போதை மறுவாழ்வு மைய நிகழ்ச்சியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் கெளசல் கிஷோர் பங்கேற்றுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், மது அருந்துபவர்களின் வாழ்நாள் வேகமாகக் குறைந்துவிடும் என்று கூறியவர், மதுவால் எனது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

வேதனை தெரிவித்த அமைச்சர்:

எனது மகன் ஆகாஷ் கிஷோர் அவனது நண்பர்களுடன் இணைந்து மது பழக்கத்துக்கு அடியானதையடுத்து, அவனை மறுவாழ்வு மையம் மூலம் நானும் எனது மனைவியும் மீட்டெடுத்தோம். அதன்பிறகு, அவனுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஆனால், சில மாதங்களிலேயே மீண்டும் மது பழக்கத்தை தொடங்கி அதற்கு அடிமையானான். அப்பழக்கத்தால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டான், அவனால் எனது மருமகளும், 2 வயது பேரனும் வேதனைகுள்ளாகினர். அதுமட்டுமல்லாமல், மது பழக்கத்தால் அன்பான குடும்பத்துடன் வாழ முடியாமல் போய்விட்டது என்று வேதனை தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஒமிக்ரான் பிஎப் 7 வைரஸ்: ஒரே நாளில்....தமிழகத்தில் உயர்ந்து வரும் எண்ணிக்கை...!

கேள்வி எழுப்பிய கெளசல் கிஷோர்:

தொடர்ந்து பேசிய அவர், நான் எம்பியாகவும், எனது மனைவி எம்.எல்.ஏவாகவும் இருந்தும், அவனுக்கு தேவையான சிகிச்சை வசதிகளை செய்து கொடுத்தும் எங்களால் மகன் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. எங்கள் நிலையே இப்படி இருக்கும்போது, சாமானிய மக்கள் எப்படி மதுப்பழக்கத்துக்கு ஆளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

சாதாரண தொழிலாளியே மேல்:

எனவே, மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு உங்கள் மகளையோ அல்லது சகோதரியையோ யாரும் திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்றும், மதுபழக்கம் வைத்திருப்பவர் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் பரவாயில்லை, மதுப்பழக்கம் இல்லாத ஒரு சாதாரண தொழிலாளியை ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று மனம் உருக கூறினார்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்:

மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் மது, புகையிலை போன்ற போதைப் பழக்கங்களுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும், காலை பிரார்த்தனையின்போதே இது தொடர்பாக விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் இணையமைச்சர் கெளசல் கிஷோர் தெரிவித்தார்.