புயலை கிளப்பிய பெகாசஸ் விவகாரம்... திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது பாராளுமன்றம்...

மாநில மொழிகளைத் தொடர்ந்து ஆங்கிலத்தையும்  மத்திய  அரசு புறக்கணிக்கிறது என்று திமுக மாநிலங்களவை  குழு தலைவர்  திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

புயலை கிளப்பிய பெகாசஸ் விவகாரம்... திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது பாராளுமன்றம்...
தொலைப்பேசி  ஒட்டுகேட்பு விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு  உரிய விளக்கம் அளிக்காததால்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பிரச்சனையை  எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்  அவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. 
 
இது தொடர்பாக  டெல்லியில்  செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநிலங்களவை  குழு தலைவர்  திருச்சி சிவா, நாடாளுமன்றம் முடங்கி இருப்பதற்கு மத்திய  அரசே காரணம் என குற்றம்சாட்டினார்.  
 
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மத்திய அரசு இந்தியில் மட்டுமே அறிக்கை அளித்துள்ளதாகவும் மாநில மொழிகளைத் தொடர்ந்து தற்போது  ஆங்கிலத்தையும் மத்திய அரசு புறக்கணித்திருப்பது கண்டனத்திற்குரியது என்றார். 
 
வேளாண் சட்டங்கள்  பெகாசஸ் ஒட்டுக்கேட்பு பற்றி விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை  என்றும்  மசோதாக்களை நிறைவேற்றுவதில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது எனவும்  திருச்சி  சிவா குறை கூறினார்.