பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா...?  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு...

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசம் மேலும் 3 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா...?  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு...
கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதார் திட்டம் அரசியல் சட்டரீதியாகச் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
 
இதற்கிடையே, வரும் 30-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைப்பது அவசியம் என்றும், அதனைச் செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும், ஜூலை 1-ம் தேதிக்கு பிறகும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில். பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக 3 மாதம் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலஅவகாசம் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம். 
 
https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற லிங்க்கை ஓப்பன் செய்யவும்.
அதில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்களைப் பதிவிட வேண்டும்.
பதிவிட்ட பின்னர் view Link Aadhaar status என்பதை கிளிக் செய்தால் உங்களது பான் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும். ஒருவேளை உங்களது ஆதாரும் பான் கார்டும் இணைக்கப்படாமல் இருந்தால் எஸ். எம்.எஸ். மூலமாகவே மிக எளிதாக இணைக்கலாம்.
 
567638 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ். எம்.எஸ். அனுப்புவதன் மூலம் இணைக்கலாம். வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து UIDPAN என டைப் செய்து ஒரு இடைவெளி (space) விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து மேற்கூறிய நம்பருக்கு அனுப்பினால் இணைக்கலாம். ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் இணைக்க முடியும்.
 
வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில், https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html என்ற முகவரியில் நீங்களே உங்களுடைய ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க முடியும். ஆதார் எண் , பான் எண் இரண்டையும் அதில் கொடுத்த பிறகு ஆதார் அட்டையில் உள்ளது போலவே உங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்ட்சா குறியீடு அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ரகசிய எண்ணை (OTP) பதிவிட்டு ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம்.