இன்று ஆசிரியர் தின கொண்டாட்டம்...  ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து...

இந்திய பாரம்பரியத்தில் இறைவனுக்கு சமமாக ஆசிரியர்கள் கருதப்படுகிறார்கள் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இன்று ஆசிரியர் தின கொண்டாட்டம்...  ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து...

முன்னாள் ஜனாதிபதி சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்டம்பர் 5ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலின் தாக்கத்தால், இந்த ஆண்டும், எளிய முறையில் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினமான இன்று, மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. 

ஆசிரியர் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,  இந்திய பாரம்பரியத்தில் இறைவனுக்கு சமமாக ஆசிரியர்கள் கருதப்படுகிறார்கள் என புகழாரம் சூட்டியுள்ளார். மாணவர்களுக்கு தங்குதடையற்ற கல்வியை வழங்க தரமான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ள குடியரசுத் தலைவர், வலுவான மற்றும் வளமான நாட்டின் கட்டமைப்பை நோக்கிய விலைமதிப்பில்லாத பங்களிப்பை வழங்கிவரும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கு இந்தத் தருணத்தில் நாம் அனைவரும் நமது நன்றியைத் தெரிவிப்போம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அறிவார்ந்த மற்றும் இணக்கமான சமூகத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தன்னுடைய இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இந்த நாளில் நாம் அனைவரும், மாணவர்களை தேசத்தின் மதிப்புமிக்க மனிதவளமாக மாற்ற வழிகாட்டிய கற்பித்தல் சமூகத்திற்கு நமது மரியாதையையும், நன்றியையும் செலுத்துவோம் என்றும், இதன் மூலம் ஒரு வலிமையான மற்றும் வளமான தேசத்தை உருவாக்க விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.