டேங்கர் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து: 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...

ராஜஸ்தானில் அதிவேகமாக வந்த பேருந்து டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

டேங்கர் லாரி மீது  பேருந்து மோதி கோர விபத்து: 12 பேர் பரிதாபமாக  உயிரிழப்பு...

ராஜஸ்தான் மாநிலம், பார்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 25 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னாள் சென்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீது அதி பயங்கரமாக மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த பலர் தீயில் சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த அவர்கள், எரிந்துக் கொண்டிருந்த பேருந்தில் இருந்து உடல்களை மீட்டனர். இந்த கோர விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான பேருந்து சாலையில் நடுவே கொழுந்து விட்டு எரிந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே சம்பவம் அறிந்து, மீட்பு பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட முதல்வர் அசோக் கெலாட், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார். இந்தநிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் என பிரதமர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.