மத்திய அரசுக்கு டிவிட்டர் நிறுவனம் கடிதம்..!!
மத்திய அரசின் புதிய டிஜிட்டல் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில், மத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதம், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய விதிகளுக்கு இணங்க மத்திய அரசு விதித்த காலகெடு கடந்த மாதம் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் டிவிட்டரை தவிர மற்ற அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் புதிய விதிகளுக்கு இணங்க நடவடிக்கை மேற்கொண்டன.
இதையடுத்து டிவிட்டருக்கு இறுதி எச்சரிக்கை அளிக்கும் விதமாக மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதையடுத்து டிவிட்டா் நிறுவனம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், புதிய டிஜிட்டல் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், சிறப்பு தொடா்பு அதிகாரி மற்றும் உள்நாட்டு குறைதீா் அதிகாரியை ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளதாகவும், விரைவில் நிரந்தர நியமனம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.