மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலால் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. பழைய கட்டடத்தில் தொடங்கிய கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு பயணம் குறித்து பிரதமர் உட்பட உறுப்பினர்கள் நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

அதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. அதில், நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா தற்போது நடைபெறும் சிறப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மசோதா கொண்டுவரப்போவதை எதிர்பார்ப்பதாகவும், இது காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.