யார் அடுத்த குடியரசு துணைத் தலைவர்? விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

யார் அடுத்த குடியரசு துணைத் தலைவர்? விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவுடன் நடைபெற்று வருகிறது.

குடியரசு துணைத் தலைவர்:

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநரான ஜெகதீப் தன்கரும், எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரான மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு:

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவை அடுத்து, இந்திய பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தங்களது வாக்கினை செலுத்தினர். அத்துடன், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சக்கர நாற்காலியில் வந்து, தனது வாக்கை பதிவு செய்தார்.

மாலை 5 மணிவரை நடைபெறும் வாக்குப்பதிவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தங்களது வாக்கை ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர்.

யார் குடியரசு துணை தலைவர் ஆவார்:

குடியரசு துணை தலைவருக்கான தேர்தலில்,  543 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 245 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். வெற்றிபெற குறைந்தபட்சம் 395 வாக்குகள் தேவை என்ற சூழலில், பாஜகவுக்கு மட்டும் மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்த்து மொத்தம் 394 உறுப்பினர்கள் உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து 510க்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு ஆளும் கட்சிக்கு  உள்ளது. இதனால், இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்து ஜெகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவராக பதவியேற்பார் என்ற  நம்பிக்கையுடன் முடிவுகளை எதிர்பார்த்து பாஜகவினர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதற்கான பதில் வாக்கு எண்ணிக்கையின் போது தான் தெரியும். யார் குடியரசு துணைத் தலைவராக வெற்றி பெறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.