இந்தியாவை மிகப்பெரிய சக்தியாக கருதுகிறேன்... ரஷ்ய அதிபர் புதின் புகழ்ச்சி...

டெல்லியில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா இடையிலான உச்சி மாநாட்டில், 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியாவை மிகப்பெரிய சக்தியாக கருதுகிறேன்... ரஷ்ய அதிபர் புதின் புகழ்ச்சி...

இந்தியா-ரஷ்யா இடையேயான 21-வது உச்சி மாநாடு, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்று உரையாடினர். இரு நாடுகள் இடையேயான நல்லுறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தொற்றால் பெரும் சவால்கள் ஏற்பட்ட போதிலும் இந்தியா-ரஷ்யா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படவில்லை என கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு ரஷ்யா அளித்து வரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இந்தியா-ரஷ்யா இடையே அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவை மிகப்பெரிய சக்தியாகவும், நம்பகமான நண்பனாகவும் கருதுவதாக வர்ணித்துள்ளார்.

இரு நாடுகளின் உறவு வளர்ச்சியடைந்து வருகிறது என்றும், இது மேலும் வளர்ச்சியடைய விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவில் மேலும் அதிக முதலீடுகளை செய்ய உள்ளதாக தெரிவித்தார். தீவிரவாதம், தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பது மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான அனைத்தையும் பற்றி தாங்கள் இயல்பாகவே கவலைப்படுவதாக கூறியுள்ள புதின்,

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து தாங்கள் கவலை கொள்வதாகவும், அங்கு நிலவி வரும் சூழல் குறித்து கவனித்து வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். இதனையடுத்து, ரஷ்யாவிடமிருந்து 6 லட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை கொள்முதல் செய்வது உள்பட  28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இருநாட்டு தலைவர்களின் முன்னிலையில் கையெழுத்தானது.

விண்வெளி, எரிசக்தி துறை, ராணுவம் ஆகியவற்றில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் 2021 முதல் 2031-ம் ஆண்டு வரை, அதாவது 10 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சி மாநாட்டின் நிறைவாக, ரஷ்ய அதிபருக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவுகளுடன் இரவு விருந்து அளித்துள்ள பிரதமர் மோடி, வாசல் வரை சென்று, கையசைத்து புதினை வழியனுப்பி வைத்தார்.