
டெல்லி மிருகக்காட்சி சாலையில், வாழ்ந்து வந்த வெள்ளை புலி, வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது. மேலும் அதற்கு எந்த உடல்நல குறைபாடும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
'விஜய்' என்ற பெயர் கொண்ட அந்த புலி 15 வயதுடையது. டெல்லி உயிரியல் பூங்காவில் பிறந்த அந்த வெள்ளை புலி, வயது மூப்பின் காரணமாக கடந்த புதன்கிழமை உயிரிழந்ததாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அதற்கு எந்த உடல்நல கோளாறு எதுவும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக, ஒரு வெள்ளை புலியின் ஆயுட்காலம், 12 முதல் 14 ஆண்டுகள் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது, டெல்லி உயிரியல் பூங்காவில் இரண்டு ஜோடி வெள்ளைப் புலிகள் மற்றும் நான்கு வங்காளப் புலிகள் உள்ளன, அதில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண் புலிகள் உள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில், டெல்லி உயிரியல் பூங்காவில் ஏழு சிங்கங்கள் மற்றும் புலிகள் இறந்ததாக மார்ச் மாதத்தில் செய்திகள் வெளியாகின. அவற்றில் நான்கு சிறுநீரக செயல்பாடு குறைவினால் இறந்தது. அதே போன்று, டிசம்பர் 2020 இல், 'நிர்பயா' என்ற வெள்ளை புலி இதய செயலிழப்பு காரணமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.