தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களை எதற்காக தயாரிக்கிறீர்கள்? நீதிமன்றம் கேள்வி

தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களை எதற்காக தயாரிக்கிறீர்கள் என்று பட்டாசு ஆலைகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களை எதற்காக தயாரிக்கிறீர்கள்? நீதிமன்றம் கேள்வி

நாடு முழுவதும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்துக்களின்  முக்கிய பண்டிகையான தீபாவளியின்போது, பொதுமக்கள் பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடுவது வழக்கம். ஆனால், காற்று மாசு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் விதித்தது. 

இந்த நிலையில், பட்டாசு வெடிக்கும் நேரத்தில் தளர்வு கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு முன்  இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது பெரிய சரவெடிகள் தடை செய்யப்பட்டும் அவை வெடிக்கப்படுவதை பார்க்கிறோம் என்றும் அரசியல் கட்சிகளின் வெற்றி கூட்டங்கள், திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் மத நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கின்றன எனவும் நீதிபதிகள் தெரிவித் துள்ளனர்.

300 வகையான பட்டாசுகள் விற்கப்படும் நிலையில், 5 மட்டுமே பசுமை பட்டாசுகள் என மனுதாரர் தரப்பில் தகவல் கூறப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும்  மனுதாரர்கள் தாக்கல் செய்த விவரங்களை பார்த்தால் விதிமீறல் ஏற்படுகிறது என்பதை பார்க்க முடிகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு  விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு   ஒத்தி வைத்தனர்.