இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் உலகத் தலைவர்கள்...!

இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும்  உலகத் தலைவர்கள்...!

76-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வரும் இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளன.

சுதந்திர தினவிழா:

இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாளாகவும், நம் நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்திய விடுதலை தலைவர்களை நினைவுக்கூறும் விதமாகவும் கொண்டாடப்படும் நாள் தான் ஆகஸ்ட் 15. இன்றையதினம் இந்திய நாட்டின் பிரதமர் டெல்லி செங்கோட்டையிலும், மாநிலங்களில் முதலமைச்சர்களும் கொடியை ஏற்றுவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொடியை தங்களது சட்டையில் குத்திக்கொண்டு தேசப்பற்றை வெளிபடுத்துவர். இந்நிலையில் நாட்டின் 76வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

வாழ்த்துக்கள்:

76 வது சுதந்திர தின விழாவையொட்டி, பல்வேறு நாடுகளிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருவதாக கூறியுள்ளார்.

உண்மை மற்றும் அகிம்சை மூலம்  மகாத்மா காந்தி வழிநடத்தி வந்த ஜனநாயக பயணத்தை கொண்டாடும் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைந்து கொள்வதாக அவர் பதிவிட்டுள்ளார். இந்திய அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்காவை அதிக புதுமையான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய வலிமையான நாடாக உருவாக்கி உள்ளனர் என்றும் இந்த ஆண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் 76-வது ஆண்டு தூதரக உறவு கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் தூதரகம் வாழ்த்து அறிக்கை:

சிங்கப்பூர் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் அன்பான நண்பர்கள் பல குறிப்பிடத்தக்க சாதனைகள் படைத்துள்ளனர் என்றும், இந்தியா தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளது. இந்திய வளர்ச்சியின் ஒரு பகுதியாக சிங்கப்பூரும் தொடர்ந்து வரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஒன்றாக இணைந்து புதிய உயரங்களை அடைவோம் என்றும் கூறியுள்ளது.

நேபாள் வெளியுறவு அமைச்சர்:

நேபாள வெளியுறவு அமைச்சர் டாக்டர் நாராயண் கட்கா, இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இப்படி பல நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு சுதந்திர தின விழா வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளது.