குடியரசுத்தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டி !

குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். 

குடியரசுத்தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டி !

புதிய குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறும் நிலையில், வேட்பாளரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று கூடின. இதில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் ஃபரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்ட நிலையில், மூவரும் தங்களுக்கு போட்டியிட விருப்பம் இல்லை எனத் தெரிவித்தனர். 

இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா, குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என ட்விட்டரில் பதிவிட்டார். 

இந்த நிலையில், டெல்லியில்  சரத்பவார் தலைமையில் எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு  பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மோடி அரசு மேலும் சேதத்தை ஏற்படுத்தாமல் தடுப்பதற்கு, குடியரசுத்தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளதாகவும், யஷ்வந்த் சின்ஹா இந்த தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது  வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.